

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் கிடைத்த ஆற்று மணல் முறைகேடாக விற்கப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சுடலைகண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நெல்லை பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அடித்தளம் அமைக்க 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
பேருந்து நிலையம் அருகே தாமிரபரணி ஆறு செல்வதால் பேருந்து நிலைய அடித்தளம் அமைக்க தோண்டப்பட்ட 30 அடி பள்ளத்தில் மணல் இருந்துள்ளது.
இந்த ஆற்று மணலை நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தினர். இது தொடர்பாக புகார் அளித்ததால் 30 அடி பள்ளத்தில் எடுக்கப்பட்ட ஆற்று மணல் ஏலம் விடப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள், அரசியல்கட்சி நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து குறைந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க 30 அடிக்கு தோண்டிய பள்ளத்தில் கிடைத்த ஆற்று மணலை மாநகராட்சி அதிகாரிகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தலைமைச் செயலர் நெல்லை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், கனிம வளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.