

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கை தேசிய விசாரணை முகமை விசாரிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை மேலூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார்.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், புறநகர் மாவட்ட துணைத் தலைவர் பி.வி.தர்மலிங்கம், மாவட்ட பொதுச் செயலர்கள் ஆனந்தஜெயம், விஜயராகவன் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் பாஜகவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் கொலையான சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றது அல்ல. இந்தக் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணியை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.