

மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கஞ்சித்தொட்டி திறப்புப் போராட்டத்தை சிஐடியூ இன்று நடத்தியது.
திருச்சி மாவட்ட சிஐடியூ மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 27-ம் தேதி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியைத் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (செப். 3) சிஐடியூ மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர் தலைமையில் கஞ்சித்தொட்டி திறப்புப் போராட்டம் நடைபெற்றது. சமைத்துப் பெரிய பாத்திரத்தில் எடுத்து வரப்பட்ட கஞ்சி, போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் குடிப்பதற்கு வழங்கப்பட்டது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து ஜி.கே.ராமர், 'இந்து தமிழ் திசை'யிடம் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி மூடப்பட்டுள்ளதால் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனிமவளத் துறையால் கண்டறியப்பட்ட கிளியநல்லூர், மாதவபெருமாள் கோவில், தாளக்குடி, கூகூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டாக மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளைத் திறக்காததைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாக கடந்த மாதம் அறிவித்தபோது ஆக.25-ம் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காததால், கஞ்சித்தொட்டி திறப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது" என்றார்.
தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியூ மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், புறநகர் மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், 15 அல்லது 20 நாட்களுக்குள் கிளியநல்லூரில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதன்பிறகு எஞ்சிய 3 இடங்களில் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.. இதையடுத்து, மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.