

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களுக்கு முறையாக மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்காததால் ஓய்வூதியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் போன்று ஓய்வூதியர்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இத்திட்டத்தை யுனெடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், எம்.டி.இந்தியா என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் ஓய்வூதியரிடம் இருந்து மாதந்தோரும் ரூ.350 பிடித்தம் செய்யபடுகிறது. இதில் 913 மருத்துவமனைகளில் 114 சிகிச்சைகள் பெறலாம்.
அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை காப்பீடு பெறலாம். புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.7.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.
மேலும் கண் புரை அறுவை சிகிச்சை ரூ.25 ஆயிரம், கருப்பப் பை நீக்க அறுவை சிகிச்சைக்கு ரூ.45 ஆயிரம் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற சிகிச்சைகளுக்கு செலவுத் தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான சிகிச்சைகளுக்கு குறைவான தொகையே காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது. இதையடுத்து ஓய்வூதியர்கள் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.
சில சமயங்களில் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்காமல் முழுத்தொகையையும் வசூலிக்கின்றனர். இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட அதிகாரமிக்க குழு, அதைத்தொடந்து மாநில அதிகாரமிக்க குழுவிடம் விண்ணப்பித்து செலவழித்த தொகையை மீள பெறலாம். மாவட்ட அதிகாரமிக்க குழு ஆட்சியர் தலைமையிலும், மாநில அதிகாரமிக்க குழு நிதி செயலர், மருத்துவச் செயலர் தலைமையிலும் செயல்படுகின்றன.
மாவட்ட மற்றும் மாநில அதிகாரமிக்க குழுக்களிடம் விண்ணப்பத்தாலும் பெரும்பாலும் செலவின தொகை கிடைக்காததால் ஓய்வூதியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து ஓய்வூதியர்கள் கூறுகையில், ‘மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களுக்கு முறையாக காப்பீட்டுத் தொகையை கொடுப்பதில்லை. செலவழித்த தொகையை கேட்டு விண்ணப்பத்தாலும் ஏதாவதொரு காரணத்தை கூறி நிராகரிக்கின்றனர்,’ என்று கூறினர்.