Last Updated : 03 Sep, 2020 05:58 PM

 

Published : 03 Sep 2020 05:58 PM
Last Updated : 03 Sep 2020 05:58 PM

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் மீன் உலர்த்தி: காரைக்கால் என்.ஐ.டி-க்கு மீனவர்கள் பாராட்டு

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் மீன் உலர்த்தியை வடிவமைத்த காரைக்கால் என்.ஐ.டி.க்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடி பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழக (என்.ஐ.டி) இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி அறிவுறுத்தலின்படி, உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள திருவேட்டக்குடி, காளிக்குப்பம், மண்டபத்தூர், கோட்டுச்சேரி மேடு, பூவம் ஆகிய ஐந்து கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. இந்தக் கிராமங்களில் உள்ள மக்களிடம் கலந்துரையாடி அப்பகுதிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் முன்னேற்றத்துக்கு உதவி புரியும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கோட்டுச்சேரிமேடு மீனவ கிராம மக்களுக்கு சூரிய ஒளி ஆற்றல் மூலம் மீன் உலர்த்தும் இயந்திரம் தயாரிக்கப்பட்டு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது அந்த இயந்திரத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் என்.ஐ.டியில் நடைபெற்ற 6-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த மீன் உலர்த்தியை மீனவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் உலர்த்தப்படும் மீன்கள் மிகவும் சுகாதாரமான முறையிலும், எளிமையான வகையிலும் உலர்த்தப்படுகிறது. சாதாரணமாக தரை பரப்பில் மூன்று நாட்கள் உலர்த்தப்பட வேண்டிய மீன்கள், 3 மணி நேரத்தில் உலர்த்தப்பட்டு கருவாடாக்கப்படுகிறது.

இந்த இயந்திரத்தைப் பெற்று பயன்படுத்தி வரும் மீனவ மக்கள் என்.ஐ.டி இயக்குநருக்கும், இயந்திரத்தை வடிவமைத்துக் கொடுத்த இயந்திரவியல் துறைத் தலைவர் செந்தில்குமாருக்கும் பாரட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற, இதன் தலைவராக என்.ஐ.டி பதிவாளர் ஜி.அகிலா என்.ஐ.டி இயக்குநரால் நியமிக்கப்பட்டுள்ளார். மீனவர்கள் மேலும் பயனடையும் வகையில் இந்த இயந்திரத்தை விரிவுபடுத்தி மற்ற மீனவக் கிராமங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக என்.ஐ.டி இயக்குநர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x