

தமிழ்நாடு வக்ஃபு வாரிய முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 3) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள், முஸ்லிம் முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு தேர்தல் கால அட்டவணை 15.07.2020 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிவிக்கையின்படி, முத்தவல்லிகள் பிரிவுக்கான தேர்தல் கடந்த ஆக. 19 அன்று நடைபெறுவதாக இருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு வக்ஃபு வாரியம் கலைக்கப்பட்டதை எதிர்த்தும் வக்ஃபு வாரியத்தைத் திருத்தி அமைப்பதற்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கையை எதிர்த்தும் வழக்குகள் W.P. No.726/2020, W.P. No.8377/2020 and W.P. No.9557/2020 தொடரப்பட்டன.
அவ்வழக்குகளில், முத்தவல்லிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு உறுப்பினர்களான சையத் அலி அக்பர் மற்றும் ஹாஜா கே. மஜீத் ஆகியோரைப் பொறுத்தவரையில் மட்டும் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் கலைக்கப்பட்ட ஆணைகள் மற்றும் அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆக. 17 அன்று தீர்ப்பளித்துள்ளது.
மேற்காணும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, ஆக. 19 அன்று நடைபெறவிருந்த இரண்டு முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு எண்.17419/2020-ல் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஆக. 28 தேதியிட்ட உத்தரவில் ஆக. 17 இல் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்ட முத்தவல்லி பிரிவுக்கான தேர்தல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற்கண்ட வழக்கின் மீதான உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் ஆணைகளுக்கு உட்பட்டு, வரும் 9-ம் தேதி, புதன்கிழமை அன்று, எண்.1, ஜாபர் சீராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை - 600 001 இல் அமைந்துள்ள தமிழ்நாடு வக்ஃபு வாரிய அலுவலகத்தில் நடைபெறும்.
ஏற்கெனவே தபால் மூலம் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் இந்த தேர்தலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தபால் மூலம் விண்ணப்பம் செய்து வாக்கு சீட்டு பெறாதவர்கள் / வாக்கு சீட்டினை பயன்படுத்தி வாக்கு அளிக்காதவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கலாம். இது தொடர்பாக வாக்காளர்கள் தேர்தல் விதிகளுக்குட்பட்டு, உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் வாக்குச்சாவடியில் பராமரிக்கப்படும் பதிவேடு மூலம் சரிபார்க்கப்படும். தபால் மூலம் வாக்களிக்காதவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கலாம். வரும் 10-ம் தேதி, வியாழக்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.