Published : 03 Sep 2020 03:43 PM
Last Updated : 03 Sep 2020 03:43 PM

வங்கிகளில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானது: ராமதாஸ்

வங்கிகளில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமையும் அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர். குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று (செப். 2) விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "கடன் தவணைகள் செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஆனால், வட்டிக்கு வட்டிக்கு விதிப்பதை ரத்து செய்வது குறித்து வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை ஆலோசித்த பின்புதான் தெரிவிக்க முடியும். அதற்கு அவகாசம் தேவை" எனக் கோரினார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கித்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது எனத் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வங்கிகளில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது என, திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கரோனா பொது முடக்கத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பொருளாதாரத்தை புனரமைக்க போதிய திட்டங்கள் தேவை எனவும் அவர் தெரிவித்தார். வங்கிக் கடன்களைச் செலுத்துவதில் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் மத்திய அரசின் வாதம் தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "வங்கிகளில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடன்தாரர்களைப் பணம் காய்க்கும் மரமாகக் கருதாமல் அவர்களிடம் கருணை காட்ட வேண்டும்!

வங்கிகளில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதியளித்தவாறு வட்டியைத் தள்ளுபடி செய்யும் நல்ல முடிவை எடுத்துத் தீர்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x