Published : 03 Sep 2020 03:08 PM
Last Updated : 03 Sep 2020 03:08 PM

அரசியலமைப்புச் சட்டம் 8-ம் அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும்; கி.வீரமணி

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

அரசியலமைப்புச் சட்டம் 8 ஆம் அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (செப். 3) வெளியிட்ட அறிக்கை:

"காஷ்மீரின் தனி அந்தஸ்து மாற்றப்பட்டு, மூன்று பகுதிகளாக அது பிரிக்கப்பட்டு, காஷ்மீர் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டு, அவர்களில் பரூக் அப்துல்லா போன்ற சிலர் பல மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் யூனியனில் 5 அலுவல் மொழிகள்

இந்நிலையில், நேற்று கூடிய மத்திய அமைச்சரவையில் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உருது, ஆங்கிலம் ஆகியவை ஏற்கெனவே அலுவல் மொழியாக நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அத்துடன் புதிதாக காஷ்மீரி, டோக்ரி, இந்தி ஆகிய மொழிகளையும் ஆட்சி (அலுவல்) மொழிகளாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத் தொடரில் இது சம்பந்தமான மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

131 ஆண்டுகளாக உருது ஆட்சி மொழி என்று இருந்த நிலை, இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது என்றும், இதுபற்றி யாரும் கேட்காமலேயே இந்தக் கூடுதல் மொழிகள் நுழைக்கப்பட்டுள்ளன. இது ஒரு வகையான பண்பாட்டுப் படையெடுப்பின் தொடர்ச்சியே என்ற கருத்து அங்குள்ள சில தலைவர்கள் சிலரால் கூறப்பட்டுள்ளது இன்று வெளியான ஆங்கில நாளிதழின் செய்தியில் வெளிவந்துள்ளது.

நமது பார்வை என்ன?

அந்தத் தலைவர்களின் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும்கூட, நமது பார்வையில் இது பல மக்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாகவே எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் ஒரு சிறு பிரதேசத்தில் 5 மொழிகள் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படும் நிலையில், பரந்து விரிந்த 130 கோடி மக்களில் காஷ்மீர் பகுதி மக்கள் நீங்கலாக உள்ள மற்ற சுமார் 120 கோடி மக்கள் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பன்மதங்கள் இருக்கும் நாட்டில், அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள 22 மொழிகளையும் ஏன் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்கக் கூடாது? என்பது மிக முக்கியமான, நியாயமான கேள்வியாகும்.

இந்த மொழிகளுடன் ஆங்கிலமும் அவசியம் இணைப்பு மொழிகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருக்கலாம். நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்ட வழக்கு மொழியாகவே உள்ளது. உலகத் தொடர்புக்கும் அது அறிவின் சாளரமாகப் பயன்படும் மொழியாகும்.

நிர்வாகச் சிக்கல் ஏற்படுமா?

இத்தனை மொழிகளில் மத்திய அரசு அலுவல் நடத்த முடியுமா? நிர்வாகச் சிக்கல் ஏற்படாதா என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும்!

மின்னணு புரட்சி, தகவல் புரட்சி பல்கிப் பெருகிவரும் இக்காலத்தில், பேசும் ஒலியை வைத்தே மின் பதிவுகள் நடைபெறுவது சர்வ சாதாரணமாகி விட்டது. மொழிபெயர்ப்பும் உடனுக்குடன் கிடைக்கும் மின் வசதிகள் நாளும் பெருக்கம் அடையும் நிலையில், அப்படி எந்த அசவுகரியமும், சிக்கலும் ஆட்சியாளர்களுக்கு ஏற்படாது.

ஒரு சிறு பகுதி காஷ்மீரில் 5 மொழிகளில் அரசு அலுவலகங்கள் நடைபெறத் திட்டமிடுகையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த மொழிகள் ஆட்சி, அலுவல் மொழியாக எளிதாகவே செயல்படுத்த முடியும். ஒவ்வொரு குடிமகனும் பெருமிதத்தோடு இந்த ஏற்பாட்டை வரவேற்பார்கள்.

22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குக!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே இந்தக் கருத்தை சில வாரங்களுக்குமுன் தெரிவித்தாரே! மின்னணு வசதிகள் பெருகிய நிலையில், இது எளிதில் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கையும்கூட விடுத்திருந்தோம்.

எனவே, மத்திய அரசு இதனை உடனடியாகப் பரிசீலித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.
திமுக உள்பட பல கட்சிகளும் இதனை நீண்ட காலமாக வற்புறுத்தி வருவதையும் இப்போது சுட்டிக்காட்டப்படுவது பொருத்தமான ஒன்றாகும். மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பது அவசியம், அவசரம்!".

இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x