

பணி மூப்பு மற்றும் பணி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்க சட்டபூர்வ வழிவகை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 3) வெளியிட்ட அறிக்கை:
"சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.
ஆனால், இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பதில்லை. இதற்கான சட்டபூர்வ வழிவகைகள் செய்யப்படவில்லை என்பதால், பணி மூப்பு மற்றும் பணி உயர்வு வழங்கல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணி நிபந்தனைகள் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. இதனை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லாது என அறிவித்தன.
இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவும் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தன.
இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு மன்றம், சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டு, பாதிக்கப்படுவர். இதனால் சமூக நீதி வழங்கலின் நோக்கம் முழுமையடையாமல் தடைப்பட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தம் செய்து, பணி மூப்பு மற்றும் பணி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டபூர்வ வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசும் முதல்வரும், தமிழக மக்களின் கருத்தைத் திரட்டி மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும்''.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.