

திமுக பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக, டி.ஆர்.பாலு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அப்பதவி காலியாக உள்ளது. இதனால், புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான திமுக பொதுக்குழு கடந்த மார்ச் 29-ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அதனால், மார்ச் 29-ம் தேதி பொருளாளர் பதவிக்கும் தேர்வு நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனிடையே கரோனா ஊரடங்கு காரணமாக, திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாளர் பதவியில் துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி கூடுகிறது.
இந்நிலையில், திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றும் (செப். 3) அதன் மீதான பரிசீலனை 4-ம் தேதியும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5-ம் தேதி மாலை எனவும் திமுக அறிவித்துள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து, திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு சார்பாக, அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், ராஜா, கருணாநிதி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக இன்று (செப். 3) டி.ஆர்.பாலு அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.