ஊரடங்கு காலத்திலும் காசநோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊரடங்கு காலத்திலும் காசநோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப். 3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேளையில் காசநோயாளிகளுக்குச் சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், கண்காணிப்பு ஆகியவை எவ்வித சுணக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் காசநோய்க்காக வெளி நோயாளிகளாக தொடர் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குக் காசநோய்க்கான மருந்து, மாத்திரைகள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 50 ஆயிரத்து 38 காசநோயாளிகளுக்கும், 2,451 டன் மருந்து எதிர்ப்புக் காசநோயாளிகளுக்கும் (MDR-TB) என மொத்தம் 52 ஆயிரத்து 489 காச நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காசநோயின் தன்மை போன்றவைகள் குறித்து கேட்டறிந்து தொடர் கண்காணிப்பும் (Continuous Monitoring) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு சத்தான உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தமிழ்நாடு முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பன்முக நடவடிக்கைகள் மூலம் காசநோயாளிகள் எவ்வித சிரமும் இன்றி ஊரடங்கு காலத்திலும் சிறப்பான சிகிச்சையை அளித்துவரும் சரியான செயல்பாட்டினை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in