

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் தலைவரும், திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரமுகர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 1985-90 இல் உருளையன்பேட்டை தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் விலகி திமுகவில் இணைந்த இவர் 2001-2006 மற்றும் 2006-2011 ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2012-2014 வரை புதுவை மாநில திமுக அமைப்பாளராகவும் பதவி வகித்தார்.
பின்னர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் பாஜகவில் இணைந்தார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது பாஜகவிலிருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் தலைவராக எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக புதுவையில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் பல் வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார், கரோனா தொற்று இருக்கலாம் எனப் பரிசோதனை செய்தபோது அவருக்குத் தொற்று உறுதியான நிலையில், கடந்த ஒரு வாரமாக காலாபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:
“புதுச்சேரி மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வருத்தத்திற்குரிய செய்தியறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுப்பிரமணியன், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் தலைவராக இருந்தாலும் - புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளராக இருந்து முன்பு கட்சிப் பணியாற்றி - கழக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். கலைஞரின் அன்பைப் பெற்றவர் என்பதை நானறிவேன். கரோனா நோய்த் தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது புதுச்சேரி மக்களுக்குப் பேரிழப்பு.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மக்கள் நீதி மய்யத் தலைவர் சகோதரர் கமல்ஹாசனுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனோ நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அனைவரையும் இந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.