

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரிய வழக்கில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒடு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.
எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இந்த வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.