Published : 03 Sep 2020 11:30 AM
Last Updated : 03 Sep 2020 11:30 AM

ஓசூர் அருகே தொட்டல்லா காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை அமைத்துத் தண்ணீரைச் சேகரிக்க விவசாயிகள் கோரிக்கை

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள அஞ்செட்டி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் இங்குள்ள தொட்டல்லா காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டாற்றின் தண்ணீரைத் தடுப்பணைகள் அமைத்துத் தேக்கிவைத்து, பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அஞ்செட்டி வனச்சரகத்தில் உள்ள குந்துகோட்டை மலைப்பகுதியில் தொட்டல்லா என்ற பெயரில் காட்டாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு, அஞ்செட்டி வழியாக ஓடி ராசிமணல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

அஞ்செட்டி பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெய்துவரும் கன மழையினால் தொட்டல்லா காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு அந்த வெள்ளம் முழுவதும் ராசிமணல் அருகே காவிரியில் கலப்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. ஆகவே இந்த தொட்டல்லா காட்டாறு குறுக்கே தடுப்பணைகள் அமைத்துத் தண்ணீரைத் தேக்கி வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, ''அஞ்செட்டி மற்றும் உரிகம் ஆகிய இரண்டு வனச்சரகங்களும் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. இந்த வனச்சரகங்களின் இடையே சுமார் 46 கி.மீ. நீளம் தொட்டல்லா காட்டாறு ஓடுகிறது. இந்த காட்டாற்றின் இடையே 12 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வாய்ப்புள்ளது. இந்தத் தடுப்பணைகளை அமைப்பதன் மூலமாக இங்குள்ள யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தண்ணீர்த் தேவையை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்ய முடியும்.

அதே வேளையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள அஞ்செட்டி, சித்தாண்டபுரம், தாம்சனப்பள்ளி, கேரட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயப் பணிகள் பெருகவும், கிராம மக்களின் குடிநீர்த் தேவைக்கும் தீர்வு காண வாய்ப்புள்ளது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x