

ஆந்திராவில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வேலூர் மாவட்ட எல்லைக்குள் நுழையும் வாகனங் களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 7-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை செப்.1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்கள் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கார்கள், வேன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவோரிடம் இ-பாஸ் உள்ளதா? என தமிழக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதில், இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே தமிழக எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருவோர் களை திருப்பி அனுப்பப்படு கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதை அறிந்து பலர் வருகின்றனர். அவர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருவதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, மத்திய அரசு உத்தரவுபடி மாநிலங்களுக்கு இடையேயும் இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.