

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாபேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா ஆகியவை 5 மாதங்களுக்குப் பின் நேற்று திறக்கப்பட்ட நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதிமுதல் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதில், நாகை மாவட்டம்வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக.29-ம் தேதிபக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 8-ம் தேதி வரை பெருவிழா நடைபெற உள்ள நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக, வேளாங்கண்ணிக்கு செல்லும் 8 வழிகளும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்தடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்.1-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனமுதல்வர் பழனிசாமி அறிவித்தார். இருப்பினும், நேற்று முன்தினம்வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்படாததால் வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் நேற்று திறக்கப்பட்டது. நேற்றுகாலை 8 மணிக்கு பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார், பங்குத்தந்தை சூசை மாணிக்கம் அடிகளார் ஆகியோர் பேராலயத்தின் வாயிலைத் திறந்துவைத்து, பக்தர்கள் உள்ளே சென்று வழிபடுவதற்கு அனுமதி அளித்தனர்.
அப்போது முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள், கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்துகொண்ட பின்னர் உரியசமூக இடைவெளியைப் பின்பற்றிபேராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பேராலய வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின், பக்தர்கள் மாதாவை மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
நாகூர் ஆண்டவர் தர்கா
இதேபோல, கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நாகூர் ஆண்டவர் தர்கா பக்தர்கள் தரிசனத்துக்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னர், தர்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பெரிய ஆண்டவர், சின்ன ஆண்டவர், சின்ன ஆண்டவர் மனைவிசுல்தான் பீவி ஆகிய 3 சன்னதிகளும் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூகஇடைவெளியை பின்பற்றி தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் மயில் ரேகைஆசீர்வாதம், பெரிய ஆண்டவர் பாதப்பெட்டி தரிசனம் ஆகியவற்றுக்கு அனுமதி தரப்படவில்லை. 5 மாதங்களுக்குப் பின், நாகூர் ஆண்டவரை தரிசனம் செய்தது மனநிம்மதியை கொடுத்ததாக இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.