திருமழிசை காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தொடரும்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

திருமழிசை காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தொடரும்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

திருமழிசை காய்கறி சந்தைக்கு செம்டம்பர் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடுவது தொடரும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து காய்கறி சந்தை, தற்காலிகமாக திருமழிசையில் இயங்கி வருகிறது. சென்னையில் கடந்த இரண்டரை மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கைத் தொடர்ந்து, அன்றைய தினங்களில் திருமழிசை காய்கறி சந்தைக்கும் விடுமுறை விடப்பட்டது. இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அரசு அறிவித்துள்ளது. ஆனால், திருமழிசை சந்தையில் ஞாயிறு அன்று விடுமுறை விடுவது தொடரும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தொழிலாளர்கள் கோரிக்கை

இது தொடர்பாக சென்னை, கோயம்பேடு அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடங்களை கோயம்பேடு சந்தையை சுற்றி அமைத்துக்கொண்டுள்ளனர். தற்போது கோயம்பேட்டில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள திருமழிசைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை வேலை செய்து சோர்வடைகின்றனர். எனவே வாரத்தில் ஒருநாள் விடுமுறை விட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடுவது தொடரும் என அறிவித்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in