Published : 03 Sep 2020 08:19 AM
Last Updated : 03 Sep 2020 08:19 AM

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க ரூ.27 கோடி மதிப்பிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் மீன்வளத் துறை பதில்மனு

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க ரூ. 27 கோடி மதிப்பிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தமிழக மீன்வளத் துறை, உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மணல் திட்டுகளால் மூடப்பட்டுள்ள பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தை நிரந்தரமாக திறப்பதற்கு ஏதுவாக அந்த இடத்தை தூர்வார வேண்டும். இதனால் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.

மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக மீன்வளத் துறை இயக்குநர் சமீரன் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், ‘‘ தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 760 சதுர கி.மீ தூரத்துக்கு பழவேற்காடு ஏரி பரந்து விரிந்துள்ளது. ஏரியையும், கடலையும் இணைக்கும் முகத்துவாரம், காற்றின் திசை அவ்வப்போது மாறுபடுவதால் ஏற்படும் மணல் திட்டுக்களால் மூடிவிடுகிறது. இதனால் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி ரூ. 27 கோடி செலவில் முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க திட்டம் வகுக்குப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கேட்புக் கூட்டம்

இந்தத் திட்டத்தை செயல்படுத்த கடலோர மண்டல ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதமே அறிவிப்பு செய்தபோதிலும், கரோனா காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முடியவில்லை. தற்காலிகமாக ஒன்றரை கோடி ரூபாய் செலவில் ஏரியின் முகத்துவாரம் தூர்வாரி திறக்கப்பட்டபோதும், மணல் திட்டுக்களால் மீண்டும் மூடிக்கொண்டது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஏரியின் முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்கும் வகையிலான திட்டம் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம், என அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x