

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முகமற்ற மதிப்பீடு முறை, வரி செலுத்துபவர்களுக்கு சாதகமா, பாதகமா என்பது குறித்து ஆடிட்டர் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வரி செலுத்துபவர்களுக்கான சாசனம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அத்துடன், மற்றொரு முக்கிய அறிவிப்பாக முகமற்ற மதிப்பீடு (Faceless Assessment) என்ற புதிய நடைமுறையை அறிவித்தார். இதன்படி, இனி வரி செலுத்துவோர் யாருக்கும் அவரது மதிப்பீட்டு அதிகாரி யாரென்று தெரியாது. அதேபோல், தன்னுடைய அதிகார வரம்பு எது என்பது வருமான வரி அலுவலருக்கும் தெரியாது.
இந்த முகமற்ற மதிப்பீடு முறை, வரி தாக்கல் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபல ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முகமற்ற மதிப்பீடு முறை, நாட்டில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தமாகும். இது வெளிப்படைத்தன்மை கொண்டது, பாரபட்சமில்லாதது, நேர்மையான மதிப்பீட்டுக்கு இது உதவிகரமாக இருக்கும்.
வருமான வரி அதிகாரிகள் இதுநாள் வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களை நேரில் வரவழைத்து அவர்களது கணக்கை ஆய்வு செய்து வரி மதிப்பீடு செய்து வந்தனர். இனி மின்னணு முறையில் வரிக் கணக்கை தாக்கல் செய்வதால், அவரது கணக்கை எந்த மாநிலத்தில் உள்ள வருமான வரித் துறை அதிகாரி ஆய்வு செய்வார் என்பது தெரியாது. எனவே நேர்மையான முறையில் வரி கணக்கிடப்படும்.
அதேநேரத்தில் சிவகாசி அல்லது திருப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தாக்கல் செய்யும் கணக்கை கான்பூரில் உள்ள வருமான வரி அதிகாரி ஆய்வு செய்வார். சிவகாசி, திருப்பூரில் நடைபெறும் வியாபாரத் தன்மை குறித்து அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால், வருமானத்தை கூடுதலாக்கி மதிப்பீடு செய்து வரியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், வரி செலுத்துபவர்களுக்கு ஏற்படும் சில நியாயமான குறைகள், புகார்கள் மற்றும் உண்மையான விளக்கங்களை அதிகாரிகளை நேரில் சந்தித்து தெரிவிக்க முடியாத ஒரு நிலையும் இதில் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது, இப்புதிய நடைமுறையில் ஆரம்பத்தில் சில பாதகங்கள் இருந்தாலும், நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது இது மிகவும் நன்மை அளிக்கக்கூடிய சீர்திருத்தம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகளிடம் கேட்டபோது, “முகமற்ற மதிப்பீடு திட்டத்தின் மூலம், வருமான வரித் துறை அதிகாரிகள் வரி கணக்குத் தாக்கல் செய்பவர்களிடம் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் முடியாது. தங்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று தேசிய அல்லது மண்டல மின்னணு மதிப்பீட்டு மையம் மூலம்தான் அனுப்ப முடியும்.
அதேபோல், வரி மதிப்பீட்டை 3 அதிகாரிகள் சேர்ந்துதான் செய்வார்கள். இதனால், ஒரு அதிகாரி தவறு செய்தாலும், மற்றொரு அதிகாரி கண்டுபிடித்து சரி செய்வார். இதன் மூலம், முறைகேடுகள் நடைபெறுவது தடுக்கப்படும். அத்துடன், இப் புதிய நடைமுறை மூலம் வரிதாரரின் அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்படுவதால், அவரால் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. எனவே, இப்புதிய நடைமுறை வரிதாரர்களுக்கும், வருமான வரித் துறைக்கும் பயனுள்ள திட்டமாகும்” என்றனர்.