வடபழனி முருகன் கோயில் திறப்பு: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

சென்னை வடபழனி முருகன் கோயில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள். படங்கள்: பு.க.பிரவீன்
சென்னை வடபழனி முருகன் கோயில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள். படங்கள்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

வடபழனி முருகன் கோயில் 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கரோனாபரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இருப்பினும், கோயில் குளத்தில் மழைநீர் வடிகால்வாய் இணைக்கும் பணி நடைபெற்று வந்ததால் வடபழனி முருகன் கோயில் நேற்று முன்தினம் திறக்கப்படவில்லை.

மழைநீர் வடிகால்வாய் இணைக்கும் பணி முடிந்த பிறகு, வடபழனி முருகன் கோயில் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் காலை 6.30 மணியில் இருந்து வரத் தொடங்கினார். கோயில் இணையதளத்தில் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய சிலர் வந்திருந்தனர். இணையதளத்தில் முன்பதிவு செய்யாமல் வந்த பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள்வரையப்பட்டிருந்த வட்டத்தில்இடைவெளிவிட்டு நிறுத்தப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, தெர்மல்ஸ்கேனர் கருவியின் மூலம் உடல்வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

முருகனை தரிசனம் செய்தபிறகு பாக்கெட்களில் வைக்கப்பட்டிருந்த விபூதியை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அனைத்து சந்நிதிகளிலும் திருப்பணிகள் நடந்து வருகின்றன. எனவே, பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தவுடன் கோயிலில் இருந்து வெளியேறினர். நேற்று நாள் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.

இதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சென்னை தியாகராய நகரில்உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் நேற்று காலை 7 மணிக்குதிறக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்களின் உடல்வெப்ப அளவு பரிசோதனைசெய்யப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in