

கரோனா பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உணவு இல்லாமல் டீ, பிஸ்கட்டை சாப்பிட்டு பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஜிவிகே - இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 1,100 வாகனங்கள் சேவையில் உள்ளன. ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள், கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் என 7 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். கரோனா பணிக்காக மட்டும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் 1,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சரியானமுறையில் உணவு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
கரோனா பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு முகாம்களில் மருத்துவக் குழுக்களுடன் தங்கியிருக்கிறோம். இங்குநேரத்துக்கு உணவு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் உணவு வழங்கும் நேரத்தில் எங்களால் முகாம்களில் இருக்க முடிவதில்லை.
அந்த நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. நேரம்தவறி வந்தால் உணவு இல்லை என்கின்றனர். உணவை பார்சல் கட்டித் தரவும் மறுக்கின்றனர். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் தினமும்20 நோயாளிகளை அழைத்துச் செல்கிறோம். அதிகமான வேலைகளை மட்டும் வாங்குகின்றனர். ஆனால், எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. டீ, பிஸ்கட்டை சாப்பிட்டு பணியாற்றி வருகிறோம்.
சிறப்பு ஊக்கத்தொகை
கரோனா தொற்று பரவிய கடந்தமார்ச் மாதத்தில் ஒரு மாதம் சிறப்புஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால்,இன்னும் வழங்கவில்லை. கரோனாதடுப்பு பணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம்வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அந்த தொகையும் வழங்கப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் கேட்டால்இன்னும் அரசாணை போடவில்லை என்று கூறுகின்றனர்.
நிவாரணம் வழங்கவில்லை
திண்டுக்கல்லை சேர்ந்த 22 வயதான கணேசன் திருப்பூரில் 108ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு கரோனாவால் இறந்துவிட்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. குடும்பத்தில் ஒரே மகன். ஆனால், இதுவரை அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கவில்லை. ஆந்திரா, கேரளாவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது விபத்தில் உயிரிழந்தால், அவர்களை கரோனா பணியில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் சேர்த்து உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குகின்றனர்.
நாமக்கல், தஞ்சாவூரில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். இதைதமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆந்திராவைப் போல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.