Published : 03 Sep 2020 07:47 AM
Last Updated : 03 Sep 2020 07:47 AM

சில காலமாவது சிறைக்குள் இருந்தால்தான் திருந்துவார்கள்; மணல் கடத்தலில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது: உயர் நீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்

சென்னை

மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால் இனி முன்ஜாமீன் கிடையாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மணல் கடத்தலை தடுக்கும் எண்ணத்தில் இந்த வழக்குகளில் சிக்குவோர் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரினால் குறிப்பிட்ட தொகையை அபராதமாக மாவட்டநிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும்என்ற நிபந்தனையுடன் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்த தொகையை மாவட்டத்தின் கனிம வள மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும்மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய 15 பேருக்கு முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீதானவிசாரணை, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பாக நேற்று நடந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமதுரியாஸ் ஆஜராகி, ‘‘மணல் கடத்தல்கும்பலுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கவில்லை என்றால், மாவட்ட நீதிமன்றங்களை அணுகி முன்ஜாமீன் பெற்று விடுகின்றனர். எனவே, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு கீழமை நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து நீதிபதி தெரிவித்ததாவது:

கனிம வளம் கேள்விக்குறியாகும்

மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு முன்ஜாமீன் எளிதாககிடைத்து விடுகிறது என்ற எண்ணத்தில்தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த நிலை இனியும் தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளமே கேள்விக்குறியாகி விடும். குடிநீருக்கும் அடுத்த தலைமுறை திண்டாட நேரிடும்.

முன்ஜாமீன் நிபந்தனையாக ரூ.25 ஆயிரம் விதித்தாலும்கூட அதை இந்தக் கும்பல் செலுத்த தயங்குவதில்லை. சிறைக்குள் போகாமல் இருக்க முன்ஜாமீன் கிடைப்பதால் தைரியமாக மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

சிறை பயம் ஏற்படும்

எனவே, இனி மணல் கடத்தலில்ஈடுபட்டால் முன்ஜாமீன் கிடையாது. இயற்கை வளங்களை சுரண்டி பிழைப்பு நடத்துவோர் சில காலமாவது சிறைக்குள் இருந்தால்தான் இதுபோன்ற குற்றங்களை மீண்டும்செய்ய மாட்டார்கள். மணல் கடத்தினால் சிறைக்கு செல்வோம் என்றபயம் வரும். அத்துடன் மணல் கடத்தல் சம்பவம் குறைந்து இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதி, வழக்கின் விரிவான தீர்ப்பு இன்று (செப்.3) பிறப்பிக்கப்படும் என கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x