Last Updated : 03 Sep, 2020 07:43 AM

 

Published : 03 Sep 2020 07:43 AM
Last Updated : 03 Sep 2020 07:43 AM

உடற்பயிற்சியின் போது முகக் கவசம் அணியலாமா?

தமிழகத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு நெறிமுறைகளில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடந்தவர்களுக்கு வெளியில் சென்று காலாற நடை பயிற்சி செய்வதற்கும் ஓட்டப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வற்கும் இப்போது தடை இல்லை என்பதால், காலையிலும் மாலையிலும் சாலை ஓரங்களில் மக்கள் மேற்சொன்ன பயிற்சிகளைச் செய்வதைக் காண முடிகிறது.

நடை பயிற்சியானாலும் சரி, மெல்லோட்டம் போன்ற எந்த ஒரு உடற்பயிற்சியானாலும் சரி, முகக் கவசம் அணிந்து கொண்டு மேற்கொள்ளக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முகச் கவசம் உதவுகிறது என்பது உண்மைதான். எனினும், அது நம் உடலுக்குத் தேவைப்படும் முழுமையான காற்றோட்டத்துக்குத் தடை செய்கிறது என்பதும் உண்மை. அதிலும் மெல்லோட்டம் போன்ற தீவிர உடற்பயிற்சிகளின் போது உடலின் ஆக்ஸிஜன் தேவை பல மடங்கு அதிகரிக்கிறது. அதனால்தான் உடற்பயிற்சிகளை செய்யும் போது நாம் வேக வேகமாக மூச்சை இழுக்கிறோம். ஆழமாகவும் மூச்சு விடுகிறோம், இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.

நிலைமை இப்படி இருக்கும் போது, உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் முகக் கவசம் அணிந்து கொள்கிறார்கள் என்றால், அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பது தடைபடுகிறது. சுவாச இயக்கத்துக்கு அது அதிக சிரமத்தை கொடுக்கிறது. மிதமாக உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கு இந்தச் சிரமம் அவ்வளவாகத் தெரிவதில்லை. கடுமையான உடற்பயிற்சிகளின் போது முகக் கவசம் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதை உணர முடியும்.

மூளை பாதிப்பு

பொதுவாக, முகக் கவசம் அணிந்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகுந்த ஆபத்தானது. அதிலும் என்-95 போன்ற முகக் கவசத்தை அணிந்து கொண்டு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தாக முடியக் கூடும்.

இன்னொன்று, தசைப் பயிற்சி போன்ற கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது, நம்முடைய தசைகள் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் கார்பன் டை ஆக்சைடாக மாற்றப்பட்டு உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. மிதமான உடற்பயிற்சியில் இருந்து தீவிரமான உடற்பயிற்சிக்குச் செல்லும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவைப்படுவதாலும், வேகமான சுவாசத்தாலும், முகக் கவசத்துக்குள் சுழன்று கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடையே மறுபடியும் மறுபடியும் உள்ளிழுக்க நேரிடுகிறது, அப்போது உடலின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், மூளை தனது செயல் திறனை முற்றிலும் நிறுத்திக் கொள்ளும் ஆபத்தான சூழல் கூட உருவாகலாம். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுயநினைவை இழக்க நேரிடலாம்.

அதே சமயம் இந்தப் பாதிப்பு அனைவருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. தனிப்பட்ட ஒரு நபரின் உடல் திறன் எவ்வாறு அமைந்திருக்கிறதோ அந்த அடிப்படையிலேயே இந்தப் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாழ்விடங்களில் வசிக்கும் மக்களுக்கு, குறைந்த அளவு ஆக்ஸிஜனில் தீவிர உடல் செயல்பாட்டில் ஈடுபடும் திறன் இயற்கையாகவே உண்டு. இது மற்ற இடங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பொருந்துவதில்லை.

இதயத்துக்கும் பாதிப்பு

மாரத்தான் போன்று நீண்ட தூரமும் அதிக நேரமும் ஓடுபவர்கள், முகக் கவசம் அணிந்து கொண்டு ஓட நேர்ந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறைந்து, கார்பன் டை ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து விடும். இது ஆக்சிஜன் குறைந்த உயரமான மலைப் பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்கு இணையானது. இதனால், இதயத்தின் பணிச்சுமை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதுதான். முகக் கவசம் நம்மை நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றுவதால், அதுவும் நமக்கு அவசியமே. எனினும், இரண்டையும் ஒன்றாகச் செய்வது, நமக்கு ஆபத்தாக மாறுவதற்கே சாத்தியம் அதிகம். எனவே, முகக் கவசம் அணிந்தபடி உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பதுதான் நல்லது.

அதேநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது 6 அடி தூரம் தனி மனித இடைவெளி காப்பதும் முக்கியம். குழு குழுவாகப் பேசிக் கொண்டு இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x