

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 போலீஸாரின் பிள்ளைகளுக்குக் கல்லூரியில் சேர உதவி செய்துள்ளார் காவல் ஆணையர். இதற்காக போலீஸார் குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பெருமளவில் கரோனா நோய்ப் பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 2,349 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதிப்படைந்து அதிலிருந்து மீண்டு பணிக்குச் சேர்ந்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவலர்களின் நலனைப் போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், காவலர்களின் வாரிசுகள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு விரும்பும் கல்லூரியில், விரும்பும் பாடப்பிரிவில் சேர விரும்பும் வாரிசுகளுக்காக சுற்றறிக்கை மூலம் விருப்ப மனு விவரங்கள் கேட்டார். அந்த விவரங்களின் அடிப்படையில் அனைத்துக் கல்லூரி நிர்வாகத்தினரிடம், காவலர்களின் நலனுக்காக தனித்தனியாகக் கடிதம் எழுதி காவல் ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன் பேரில். இதுவரை 123 மாணவர்களுக்குக் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டுள்ளது.
கடந்த (20.08.2020) அன்று பல்வேறு கல்லூரிகளில் சேர்க்கை அனுமதியளிக்கப்பட்ட 52 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முதல்வர்களை அழைத்துக் கவுரவித்து காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்லூரிச் சேர்க்கை அனுமதிக் கடிதம் மற்றும் வாழ்த்துக் கடிதத்தை காவல் ஆணையர் வழங்கினார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று (02.09.2020) மீண்டும் 71 காவலர்களின் குழந்தைகளுக்கு, விரும்பிய கல்விக்கான கல்லூரிச் சேர்க்கை அனுமதிக் கடிதத்தினை வழங்கினார். மேற்கண்ட விருப்பக் கல்விக்கான அனுமதி வழங்கிய கல்லூரி நிர்வாகத்தினரைப் பாராட்டிக் கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்கள் தலைமையிடம், தெற்கு, வடக்கு, போக்குவரத்து மற்றும் மத்திய குற்றப் பிரிவு, இணை ஆணையாளர்கள், கிழக்கு, தலைமையிடம் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகம் பல்லாவரம், சத்தியபாமா பல்கலைக்கழகம் சோழிங்கநல்லூர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், எம்எம்எம் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர காவலர்கள் கரோனா பணியில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில், தங்கள் குழந்தைகள் படிப்புக்காக உதவிய காவல் ஆணையருக்கு காவலர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்”.
இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.