

போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளத்தில் இன்று விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்ற 9 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் சிலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் விசாரணையில் சில நாட்கள் தொய்வு ஏற்பட்டது. தற்போது அனைவரும் குணமடைந்ததை தொடர்ந்து மீண்டும் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லி சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான விசாரணைக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிஐ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.
மேலும், நேற்று ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மூன்று சிபிஐ அதிகாரிகள் இன்று பகல் 12.30 மணியளவில் சாத்தான்குளம் வந்தனர். பென்னிக்ஸின் நண்பரான வழக்கறிஞர் ராஜாராம் அலுவலகத்தில் வைத்து, இந்த வழக்கு தொடர்பான பல்வேறு சாட்சிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். பென்னிக்ஸ் கடை அருகே கிளினிக் நடத்தி வரும் பல் மருத்துவர் தாம்சன், ஆட்டோ டிரைவர் மணி, பழக்கடை நடத்தி வரும் ரவி உள்ளிட்ட 9 பேரை நேரில் அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, சாட்சியங்களை பதிவு செய்தனர்.
தொடர்ந்து பென்னிக்ஸ் கடை அருகேயுள்ள டாக்டர் தாம்சனின் பல் மருத்துவமனை, அப்பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை, பழக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை 4 மணி வரை தொடர்ந்தது. பின்னர் சிபிஐ அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர்.