ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: போயஸ் தோட்டத்தில் சசிகலாவுக்காக புதிதாகக் கட்டப்படும் பங்களாவில் முடக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டது

ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: போயஸ் தோட்டத்தில் சசிகலாவுக்காக புதிதாகக் கட்டப்படும் பங்களாவில் முடக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டது
Updated on
1 min read

பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ள வருமான வரித்துறையினர், சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் முடக்கியுள்ளதாக வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது சம்பந்தமாக கடந்த ஆண்டு 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதாக அறிவித்தது வருமான வரித்துறை. இது தொடர்பாக சசிகலா தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், சசிகலா தரப்பினர் 2003-2005 ஆம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின்கீழ் தற்போது, ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பினாமி பிரமுகர்களுக்கும் அந்தச் சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்த அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள இடங்களும் தற்போது முடக்கப்பட்ட சொத்தில் அடங்கும். சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு அருகே வாங்கப்பட்ட நிலமும் இந்த முடக்கத்தில் அடங்கும்.

விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா தங்குவதற்காக, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் எதிரே சுமார் 9 கிரவுண்ட் பரப்பளவில் பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடக்கப்பட்ட சொத்துகளில் புதிதாக கட்டப்பட்டுவரும் போயஸ் தோட்ட இல்லமும் அடங்கும் என்பால் அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த இடம் முடக்கப்பட்டதற்கான நோட்டீஸை அங்கு ஒட்டினர்.

அந்த நோட்டீஸில், “இந்த இடம் பினாமி சொத்து பரிமாற்றத் தடைச் சட்டம் 1988-ன் படி முடக்கப்பட்டுள்ளது. 90 நாட்களுக்குள் இந்தச் சொத்திற்கான ஆதாரங்களை வழங்க இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த சொத்துகளை வேறு யாரும் வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து குறித்த ஆவணங்களைக் கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறினால், சட்டபூர்வமாக இந்த இடத்தை சீல் வைத்து கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல முடக்கப்பட்ட 65 சொத்துகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in