

திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் மழையுடன் தொடங்கியுள்ளது. இதன்படி, கடந்த 2 நாட்களும் திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே மாதத்துக்குக் குறைந்தது ஒருமுறையாவது நல்ல மழை பெய்து வருகிறது. ஜூலை மாதம் 8 முறையும், ஆகஸ்ட் மாதம் 4 முறையும் பலத்த மழை பதிவாகியது.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதமும் மழையுடனேயே தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆக. 31, செப்.1 ஆகிய 2 நாட்களும் பலத்த மழை பெய்தது. ஆக. 31-ம் தேதி இரவு 491.30 மி.மீ., செப். 1-ம் தேதி இரவு 587.30 மி.மீ. என 2 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,078.60 மி.மீ. மழை பதிவாகியது.
திருச்சி மாவட்டத்தில் செப். 2-ம் தேதி காலை நிலவரப்படி அதிகபட்சமாக நந்தியாறு தலைப்பில் 73.80 மி.மீ., விமான நிலையத்தில் 51.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
துறையூர் 49, மருங்காபுரி 45.20, தேவிமங்கலம் 40, பொன்மலை 32.60, சமயபுரம் 31.40, லால்குடி 30, மணப்பாறை 28.20, புள்ளம்பாடி 25.80, நவலூர் குட்டப்பட்டு 25.40, கல்லக்குடி 23.20, திருச்சி ஜங்ஷன் 21, வாய்த்தலை அணைக்கட்டு 19.20, சிறுகுடி 17, துவாக்குடி 16, திருச்சி நகரம் 14.20, தாத்தையங்கார்பேட்டை 14.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகல் வேளையில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.