

கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெருமாள்சாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாயால் 150 ஆயக்கட்டுதாரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். எழும்பள்ளம் கண்மாயில் ரூ.90 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விதிப்படி பத்து லட்ச ரூபாய்க்கு அதிகமான மதிப்பீடு உடைய குடிமராமத்து பணிகள் டெண்டர் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த விதியை பின்பற்றாமல் மன்னவனூர் பெருமாள்சிறை வாய்க்கால் எழும்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்துரைக்கு சட்டவிரோதமாக குடிமராமத்து பணிக்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்து, விதிப்படி குடிமராமத்து பணிக்கான ஒப்பந்தத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்து பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து, மனு தொடர்பாக பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்.11-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.