

பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளான தொண்டை வலி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பு அபாயம் ஏற்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நோய்த் தொற்று தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் தென்படும்போதே பொதுமக்கள் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றால் எளிதில் குணமடையலாம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்ட அரசு உயர் அலுவலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள தயங்கியபோது உடனடி சிகிச்சை எடுப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக அவர் கரோனோ நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கரோனா பரிசோதனை செய்துள்ளார். சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாகவே மீண்டும் வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதற்குள் அவரது நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்றின் அறிகுறிகளை அலட்சியம் செய்து ஆரம்ப நிலையில் சுயமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு, நோய்த் தொற்று முற்றிய பின்னர் சிகிச்சை மேற்கொள்ள வருவதால் சிகிச்சை அளிப்பது கடினமாவதோடு, சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் தவிர்க்க இயலாததாகிறது.
எனவே பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளான தொண்டை வலி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அனைவரும் கலந்துகொண்டு தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், கொதிக்க வைத்த குடிநீரை பருகுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளி கடைபிடித்தல், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வராது தவிர்த்தல் போன்ற எளிய நடைமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.