சென்ட்ரல்-திருப்பதி, அரக்கோணம் பாஸ்ட் லோக்கல் ரயில்களை ஆவடியில் நிறுத்த பயணிகள் கோரிக்கை

சென்ட்ரல்-திருப்பதி, அரக்கோணம் பாஸ்ட் லோக்கல் ரயில்களை ஆவடியில் நிறுத்த பயணிகள் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு திருப்பதிக்கும் (வண்டி எண்.66047), இரவு 7.30 மணி (வண்டி எண்.43247) மற்றும் 8.00 மணிக்கு (43431) அரக்கோணத்துக்கும் தினமும் பாஸ்ட் லோக்கல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் ஆவடியில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த லஷ்மி நரசிம்மன் என்ற பயணி கூறியதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு சாதாரண கட்டணத்தில் பயணிப்பதற்காக பாஸ்ட் லோக்கல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரம்பூர், வில்லிவாக்கம், திருநின்றவூர், திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ஆனால், ஆவடியில் நின்று செல்வதில்லை. ஆவடி பாதுகாப்புத் துறை அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மைய கேந்திரமாக திகழ்கிறது.

மேலும், ஆவடியில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பான பஸ் சேவை உள்ளது. மேற்கண்ட ஊர்களில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் பயணிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் ஏறுவதை விட ஆவடி ரயில் நிலையத்துக்கு வந்து ரயில் ஏறுவது மிகவும் எளிதாக உள் ளது.

மேலும், ஆவடியில் தற்போது திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழை ஆகிய அதிவிரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில், திருப்பதி ரயில் ஆவடியில் நிற்காமல் செல்வது ஆச்சரியமாக உள்ளது. இதேபோல், சென்ட்ரலில் இருந்து இரவு நேரத்தில் அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 2 பாஸ்ட் லோக்கல் ரயில்களுக்கும் ஆவடியில் நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது.

இந்த 2 ரயில்களும் பேசின்பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. ஆனால், பயணிகள் அதிகம் பேர் இறங்கும் ஆவடியில் இந்த ரயில்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அம்பத்தூரில் இறங்கி மற்றொரு ரயில் மூலம் ஆவடிக்குச் செல்ல வேண்டி உள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே, பயணிகளின் நலன் கருதி மேற்கண்ட ரயில்கள் ஆவடியில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விரைவில் வெளியாக உள்ள புறநகர் மின்சார ரயில்களுக்கான கால அட்டவணையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இவ்வாறு லஷ்மி நரசிம்மன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in