Published : 02 Sep 2020 07:59 AM
Last Updated : 02 Sep 2020 07:59 AM

கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இனி தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இனி தகரம்அடிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நோய்த் தொற்றை கவனமாக கையாள வேண்டும். சென்னை மாநகராட்சியில் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கஉள்ளது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உட்பட பணிசெய்யும் இடங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதை அதிகப்படுத்த உள்ளோம்.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் இனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டும்தான் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் இல்லையென்றால் அவரவர் வீடுகளுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நோய் தொற்று குறைந்துவிட்டது என்ற தவறான புரிதல் யாருக்கும் வந்துவிட கூடாது. குறைந்தது நவம்பர் மாதம்வரையாவது முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ஜூன்முதல் வாரத்தில் கரோனா பரிசோதனை செய்பவர்களில் 36 சதவீதம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது 9 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது போன்ற காரணங்களால் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இனி தகரம்அடிக்கப்படாது.சென்னையில்12,600 பேரிடம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில்சென்னையில் 21.5% பேர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது தெரிய வந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x