Published : 02 Sep 2020 07:56 AM
Last Updated : 02 Sep 2020 07:56 AM

ஊரடங்குக்கு முன்பு மார்ச்சில் வாங்கிய பேருந்து பயண சலுகை அட்டை: செப்.15 வரை செல்லும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

ஊரடங்குக்கு முன்பு பயணிகள் பயன்படுத்தி வந்த பேருந்து பயண சலுகை அட்டை, செப்டம்பர் 15-ம் தேதி வரை செல்லும். பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும். காலை, மாலை வேளைகளில் கிராமப்புறங்களில் அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு மாநகரப் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதையடுத்து, சென்னை பல்லவன் இல்லத்தில் கிருமிநாசினி மூலம் பேருந்துகளை சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து, அரசு வழிகாட்டுதல்கள்படி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, 6 ஆயிரத்து 90 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. புறநகர் பேருந்துகளில் 32 பயணிகள், நகர பேருந்துகளில் 24 பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பின்புற வழியில் ஏறி, முன்புறம் இறங்க வேண்டும்.

பேருந்தில் ஏறும்போது பயணிகளுக்கு கைகழுவும் திரவம் அளிக்கப்படுகிறது.

பயணிகள் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது. எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கேற்ப பேருந்துகள் இயக்கம்அதிகரிக்கப்படும். மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள், அருகில் உள்ள மாவட்ட பேருந்து நிறுத்தம்வரை இயக்கப்படுகிறது. பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும். காலை, மாலை வேளைகளில் கிராமப்புறங்களில் அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனை நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை.

மார்ச் மாதத்தில் பெற்ற மாதாந்திர பயண சலுகை அட்டையை ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு முன்பு 8 நாட்கள் மட்டுமே பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். எனவே, அந்த அட்டைகளை செப்.15-ம்தேதி வரை பயன்படுத்தலாம். புதிய சலுகை அட்டை நாளை முதல் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, போக்குவரத்துத் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் தென்காசி ஜவகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x