Published : 02 Sep 2020 07:53 AM
Last Updated : 02 Sep 2020 07:53 AM

65-வது ஆண்டில் 12 லட்சம் பாலிசிகளை விற்று எல்ஐசி ரூ.3,598 கோடி பிரீமியம் வசூல்: கரோனா தொற்றால் உயிரிழந்த பாலிசிதாரர்களுக்கு ரூ.3.86 கோடி

சென்னை

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 31-ம்தேதி வரை 12 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.3,598 கோடி பிரீமியமாக ஈட்டப்பட்டு உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்த 56 பாலிசிதாரர்களின் இறப்புரிமங்கள் மூலமாக ரூ.3.86 கோடி வழங்கப்பட்டு உள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டு வாரம்

ஆண்டுதோறும் செப்.1-ம் தேதி முதல் ஒருவார காலம், எல்ஐசி நிறுவனம் சார்பில் காப்பீட்டு வாரமாக அனுசரிப்படுகிறது. இதை முன்னிட்டு, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எல்ஐசி நிறுவனம் தனது 65-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1957 டிச.31-ல் ரூ.381.9 கோடியாக இருந்த இதன் சொத்து மதிப்பு கடந்த மார்ச் 31-ம் தேதியன்று ரூ.31.96 லட்சம் கோடிகளாக அதிகரித்துள்ளது.

பிரீமியம் ரூ.5,672 கோடி

தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய எல்ஐசி தென்மண்டல அலுவலகம், கடந்த மார்ச் 31-ம்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகளை பெற்று முதல் வருட பிரீமியமாக ரூ.5,672 கோடிகளை ஈட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாலிசி புதுப்பித்தல் முகாமில் 1.34 லட்சம் பாலிசிகளை புதுப்பித்து 104 லட்சத்துக்கும் மேலான தாமதக் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

2 லட்சம் பாலிசிகள்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 31-ம்தேதி வரை 12 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் மூலம் ரூ.3,598 கோடி பிரீமியமாக ஈட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் மூலம், ரூ.1,567 கோடிகளை பிரீமியமாக ஈட்டி உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்த 56 பாலிசிதாரர்களின் இறப்புரிமங்கள் மூலமாக ரூ.3.86 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x