

தமிழக அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் நேற்று கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குஅதிகாலை 5.30 மணியில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்படுவதால் பலர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தெர்மல் ஸ்கேனர் கருவிமூலம் உடல் வெப்பநிலை பரிசோதனைசெய்யப்பட்ட பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பாக்கெட்களில் வைக்கப்பட்டிருந்த விபூதி, குங்குமத்தை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். கோயில் வளாகத்தில் அமரவும், விழுந்து கும்பிடவும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தவுடன் கோயிலில் இருந்து வெளியேறிச் சென்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு காலை 7 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். கோயில்நடை திறப்பதற்கு முன்பு வந்த பக்தர்களுக்கு பச்சை நிற டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்களைப் பெற்ற பக்தர்கள் இடைவெளிவிட்டு வரையப்பட்ட வட்டங்களில் வரிசையில் நின்றிருந்தனர்.
விஸ்வரூபம், திருவாராதனம் முடிந்தபிறகு காலை 8 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோயில் குளத்தை இணைத்து மழைநீர்வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் வடபழனி முருகன் கோயில்நேற்று திறக்கப்படவில்லை. அனைத்து பணிகளையும் முடித்து இன்று முதல் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கந்தகோட்டம் முருகன் கோயில், பூங்கா நகர் தங்க சாலை தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், மசூதிகள், தேவாலயங்களிலும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
பக்தர்கள் சுவாமி தரினம் செய்ய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=1