

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் இன்று திறக்கப்பட்டன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என்று மொத்தமுள்ள 190 நூலகங்களும் இன்று திறக்கப்பட்டதாக மாவட்ட நூலக அலுவலர் இரா. வயலட் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பகுதிநேர நூலகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மற்ற அனைத்து நூலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
மாவட்ட மைய நூலகத்துக்கு வருவோர் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சானிடைசர் மூலம் கைகளை கழுவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நூலகத்தில் ஒரே இடத்தில் அதிகளவில் வாசகர்கள் கூடும் வாசிப்பு பிரிவுக்கு அனுமதியில்லை.
அதேநேரத்தில் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம் என்று தெரிவித்தார்.
நூலகங்கள் இன்று திறக்கப்பட்டிருந்தாலும் வாசகர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே நூலகங்களில் காணப்பட்டது.