

2019-20 ஆம் ஆண்டுக்குப் பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி நாகை மாவட்டம் திருக்குவளையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருக்குவளை ஒன்றியத் தலைவர் ஏ.செல்லையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2019-20 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையைக் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (100 நாள் வேலை) வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி ஊதியத்தை 600 ரூபாயாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தற்போது அரசு அமல்படுத்தியுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம், மின்சாரச் சட்டத் திருத்தம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது போன்ற அவசரச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. நாகராஜன், டி.கண்ணையன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வீ. சுப்பிரமணியன், சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.இராமலிங்கம், டி.பாலாஜி, என்.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.