

ஊரடங்கு தளர்வு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 87 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக மாவட்டங்களுக்குள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 5 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கின.
முதலில் பேருந்து நிலையங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்ததும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன.
மேலும், பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பேருந்துகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். அதற்கு பிறகே பேருந்துகள் இயங்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி- கோவில்பட்டி, தூத்துக்குடி- விளாத்திகுளம், தூத்துக்குடி- திருச்செந்தூர், தூத்துக்குடி- நாசரேத்- சாத்தான்குளம், தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட மாவட்டத்துக்குள் உள்ள அனைத்து வழக்கமான வழித்தடங்களிலும், நகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.
வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பணியாளர்களுக்காக திருநெல்வேலிக்கு மட்டும் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டியில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின.
மாவட்டம் முழுவதும் நேற்று 87 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. முதல் நாள் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கு ஏற்ற வகையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதேநேரத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவு என்பதால் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.