திருச்செந்தூர் கோயில் 5 மாதங்களுக்குப் பிறகு திறப்பு: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5 மாதங்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி கிடைத்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக வழிபாட்டு தலங்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 5 மாதங்களுக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. தெற்கு டோல்கேட் அருகில் முடி காணிக்கை மண்டபத்துக்கு எதிரில் உள்ள இடத்திலும், வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலை அரங்கிலும் பக்தர்களை அமரச்செய்து, அடையாள அட்டை விவரம் பெற்று டோக்கன் மற்றும் கட்டணச் சீட்டு வழங்கப்பட்டு, 25 நபர்களாக குறிப்பிட்ட கால இடைவெளில் கோயிலுக்குள் அனுப்பப்பட்டனர்.
முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பக்தர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய 13 இடங்களில் வசதி செய்யப்பட்டிருந்தது. கோயிலின் பிரதான சன்னதிகளான மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் சன்னதிகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தங்க ரதம், சண்முக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்ய பூஜை பொருட்களை கோயிலுக்குள் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கடற்கரையில் நீராடுதல், நாழிக்கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதேபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில், தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருக்கோயில், நவத்திருப்பதி கோயில்களும் நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை சுத்தம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்களும் நேற்று காலை முதல் வழக்கம் போல் திறக்கப்பட்டன. அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களில் காலை மற்றும் மாலை வழிபாடுகள் நடைபெற்றன.
குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதுபோல பள்ளிவாசல்களுக்கும் இஸ்லாமியர்கள் வழக்கம் போல் வந்து தொழுகை நடத்திவிட்டு சென்றனர்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை சுத்தம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
