எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அனிதா: 3-ம் ஆண்டு நினைவு நாளில் ஸ்டாலின் பதிவு

எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அனிதா: 3-ம் ஆண்டு நினைவு நாளில் ஸ்டாலின் பதிவு
Updated on
2 min read

தனக்காகச் சிந்திக்காமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்தவர் அரியலூர் அனிதா. நீட் தேர்வு எனப்படும் பலிபீடத்தில் தன்னையே காணிக்கை ஆக்கிய சமூக நீதிப் போராளியான அவரது நினைவைப் போற்றுவோம் என அனிதாவின் நினைவு நாளில் திமுக தலைவட் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. நீட் நுழைவுத்தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்த நேரத்தில் அரியலூர் அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், சாதாரணமாக சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்திருக்கும்.

ஆனால், நீட் தேர்வை அமல்படுத்தியதால் அதில் அனிதாவால் தேர்ச்சி அடைய முடியவில்லை. தனக்காக நியாயம் கேட்டு அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் அனிதா சந்தித்தார். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அளவில் பாதிக்கப்பட்ட மாணவி என்கிற முறையில் அனிதா ஆஜரானார்.

ஆனால், தீர்ப்பு வேறுவிதமாக அமைந்தது. நீட் தேர்வுக்கெதிரான போராளியாக அனிதாவை அனைவரும் பார்த்துவந்தவேளையில், செப்.1-ம் தேதி அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய மரணங்களில் அனிதாவின் மரணமும் ஒன்று.

அனைத்துத் தகுதிகளும் இருந்த நிலையில் மருத்துவராக ஆகவேண்டிய மாணவி தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் மரணமடைந்த 3-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

முகநூலில் அனிதா குறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

“தனக்காகச் சிந்திக்காமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்தவர் அரியலூர் அனிதா. நீட் தேர்வு எனப்படும் பலிபீடத்தில் தன்னையே காணிக்கை ஆக்கிய சமூக நீதிப் போராளியான அவரது நினைவைப் போற்றுவோம்.

நீட் போன்ற தடுப்புச் சுவர்களை உடைத்து சமூகத்தின் உயர் கல்வியையும் பதவிகளையும் இம்மண்ணில் வாழும் அனிதாக்கள் பெறுவதே, மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மை அஞ்சலி ஆகும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in