

சீர் செய்யப்பட்ட மொத்த வருவாயான ரூ.1.47 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்குச் செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் தவணையை வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் கட்டவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் 1999-ல் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசென்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனமும் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை அளவிற்கு ஏற்ப இந்த லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அலைக்கற்றையைப் பயன்படுத்தி, மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயும் இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டு மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியாவில் உள்ள 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தமாக சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. அதை உடனடியாகச் செலுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு இந்தத் தொகையினைக் கொடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக எந்தவிதமான புதிய வழக்குகளும் தாக்கல் செய்யக்கூடாது, என கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர், எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய லைசன்ஸ் கட்டணத் தொகை மற்றும் இத்தனை நாள் கட்டாமல் இருந்ததற்கான அபராதம் அதற்கான வட்டி என மொத்தமாக சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தத் தொகையினைச் செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்கக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அந்த மனுக்கள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை தொடக்கத்தில் 10 நாட்களில் முழு நிலுவைத் தொகையினைச் செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அளித்தன.
மேலும் முழுத் தொகையை உடனடியாகச் செலுத்தினால் நிறுவனம் திவால் ஆகிவிடும், வேலையிழப்பு ஏற்படும், எனவே எஞ்சியுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும், அதுவும் தவணை மூலம் செலுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன.
அனைத்துத் தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு விவரம்:
“ *சீர் செய்யப்பட்ட மொத்த வருவாயைச் செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. (20 ஆண்டுகள் கேட்டிருந்தனர்) .
* தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய சீர்செய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாயைச் செலுத்த 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.
* செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத்தொகையில் 10 சதவீதத் தொகையினை முதல் தவணையாக வரும் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும்.
* அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் விற்பனை விவகாரங்களை திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது. இது தொடர்பான முடிவுகளை தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் எடுத்துக் கொள்ளட்டும்”.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.