

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் பேருந்துப் போக்குவரத்து தொடங்கும் என அரசு அறிவித்த நிலையில் 5 மாதங்களுக்குப் பின் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகளில் பாதிக்கும் குறைவாகவே பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ள நிலையில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
சென்னையில் 3,300 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பேருந்துகள் ஓடுகின்றன.
ஓய்வு எடுத்த பேருந்துகள்
தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. முற்றிலும் முடக்கப்பட்ட பொதுப் போக்குவரத்தால் இந்தியாவிலேயே பெரிய போக்குவரத்துக் கழகமான தமிழக போக்குவரத்துக் கழகத்தின் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஊரடங்கு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை தொடர்ந்தது. செப்டம்பரில் ஊரடங்கு நீடித்தாலும் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இதில் முக்கியமானது பேருந்துப் போக்குவரத்து தொடக்கம், இ-பாஸ் தளர்வு. இதனால் பொதுமக்கள் குறிப்பாக சாதாரண அடித்தட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்கெனவே ஜூன் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மண்டலங்களுக்குள் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் கரோனா பரவல் அதிகரிப்பதாகத் தெரிவித்ததின் அடிப்படையில் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
ஆனாலும், தொற்று அதிகமாக இருந்த சென்னையில் பேருந்துப் போக்குவரத்தை இயக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் 5 மாதங்கள் ஓரங்கட்டப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செப்.1 இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 33 பணிமனைகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இன்று முதல் இயங்குகின்றன. பேருந்துகள் இயங்கினாலும் சென்னை மாவட்ட எல்லைக்குள் மட்டுமே இயக்கப்படும்.
5 மாதங்களுக்குப் பின் இயக்கப்படும் பேருந்துகளில் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நிற்க அனுமதி இல்லை. பயணிகள் பேருந்தில் பின்பக்கமாக ஏறி, முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும்போது படிக்கட்டின் பக்கவாட்டில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும்.
பயணிகள் அந்த கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்குப் பேருந்தில் அனுமதி இல்லை. பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கைகளில் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும். பேருந்துகள் பணிமனைகளில் இருந்து புறப்படும்போதும், இரவு பணிமனைக்குத் திரும்பும்போதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படும்.
இன்று சென்னையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பொதுமக்கள் அதிக அளவில் பேருந்தில் ஏற ஆர்வம் காட்டாததால் பேருந்துகள் காலியாகவே சென்றன.