Published : 01 Sep 2020 12:56 PM
Last Updated : 01 Sep 2020 12:56 PM

முதுமலை அருகே பெண்ணை கொன்ற புலி ஆட்கொல்லியாக இருக்காது; வனத்துறை

பெண்ணை கொன்ற புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும், அந்த புலி ஆட்கொல்லியாக இருக்காது எனவும் வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடி குரும்பர்பாடியை சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி கவுரி (55). இருவரும் நேற்று (ஆக.31) காலை வழக்கம் போல சிங்காரா சரகத்துக்கு உட்பட்ட கல்ஹல்லா வனப்பகுதியில், கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, புலி ஒன்று கவுரியின் கழுத்தை கவ்வி பிடித்து இழுத்துச் சென்றது. பீதியில் உறைந்து போன அவர்கள் சத்தம் போட்டு அங்கு கிடந்த கட்டை, கல் உட்பட பொருட்களை எடுத்துப் புலியின் மீது வீசியுள்ளனர். 500 அடி தூரம் இழுத்துச் சென்ற புலி பின்னர் கவுரியை அங்கேயே விட்டு விட்டுத் தப்பிச் சென்றது.

புலியை விரட்டியவர்கள் ஓடிச் சென்று கவுரியை பார்த்த போது புலி கழுத்தைக் கவ்வி பிடித்ததில் கவுரி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

உயிரிழந்த கவுரி

முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஸ்ரீகாந்த் தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை இறந்த கவுரியின் கணவர் மாதன் மற்றும் மகன் மணியிடம் வழங்கினார். மணி வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

பழங்குடியின பெண்ணை கொன்ற புலி ஆட்கொல்லியாக மாறியிருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால், புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

அவர் கூறும் போது, "மசினகுடி அருகே பெண்ணை கொன்ற புலி ஆட்கொல்லியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, புலியின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வேளை அந்த புலி ஆட்கொல்லியாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வனத்துறையினர் கூறும் போது, "முதுமலை புலிகள் காப்பகத்தில் இதுவரை புலி மனிதர்களை அடித்துக் கொன்றதில்லை. அந்த புலி மாட்டை பாய்ந்து பிடிக்க பதுங்கியிருந்த போது, பழங்குடியின பெண் குறுக்கே சென்றதால் அவரை தாக்கியுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x