

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், திண்டுக்கல்லில் பயணிகள் கூட்டம் இல்லாததால் குறைவான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (1.9.2020) முதல்கட்டமாக 89 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் 46 நகரப் பேருந்துகள் , 5 மலைக் கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள், 38 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைப் போல் தேனி மாவட்டத்தில் 30 நகரப் பேருந்துகள் , 30 புறநகர் பேருந்துகள் உள்பட 60 பேருந்துகள் இயக்கப்பட்டன.
மக்களின் தேவை அடிப்படையில் 50 சதவிகிதப் பேருந்துகள் வரை இயக்கப்படும். ஒவ்வொரு பேருந்திலும் 60 சதவிகிதப் பயணிகளுடன் இன்று முதல் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரை சாலையில் கொடை ரோடு அம்மை நாயக்கனூர் வரையிலும், நத்தம் சாலையில் நத்தம் வரையிலும். தேனி சாலையில் வத்தலக்குண்டு வரையிலும் ,பழனி சாலையில் பழனி மற்றும் சாமிநாதபுரம் வரையிலும், தாராபுரம் சாலையில் கள்ளிமந்தையம் வரையிலும், கரூர் சாலையில் வேடசந்தூர் வரையிலும், திருச்சி சாலையில் அய்யலூர் வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மலைப்பகுதிகளைப் பொறுத்தவரை வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு பேருந்தும், லத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடி, பட்டிவீரன்பட்டி வழியாக சித்தரேவு வரையிலும், திண்டுக்கல்லில் இருந்து ஆடலூர் வழியாக பன்றிமலைக்கும், சிறுமலைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொடைக்கானலில் இருந்து பெருமாள்மலை வரையிலும், வில்பட்டி, கிளாவரைக்கு மக்களின் தேவை அடிப்படையிலும் இயக்கப்படுகிறது.
இதைப்போல் தேனி மாவட்டத்தில் மதுரை சாலையில் ஆண்டிபட்டி வரையிலும், குமுளி சாலையில் கூடலூர் லோயர்கேம்ப் வரையிலும் , மூணாறு சாலையில் போடி வரையிலும், திண்டுக்கல் சாலையில் பெரியகுளம் தேவதானப்பட்டி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பேருந்திலும் கிருமிநாசினி மருந்து தெளித்து இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு பேருந்தின் பின்புறம் ஏறும்பொழுது கைகளில் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுமதிக்கப்படுவர். பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.
பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்திட வேண்டும். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் உரிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பயணிகள் பேருந்தில் ஏறுவதை கண்காணிக்கின்றனர். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் ந.கணேசன் தெரிவித்துள்ளார்.