

சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சர்வதேச தபால் சங்கம் சார்பில் தேசிய அளவிலான 44-வது கடிதம் எழுதும் போட்டி சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் மதுரை டி.வி.எஸ். லட்சுமி மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவர் ீ சௌரீஸ் நமகிரி 3-ம் இடம் பெற்றார். இவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த மாணவருக்கு பாராட்டு விழா, நினைவு அஞ்சல் தலைகள் கண்காட்சி தொடக்க விழா மதுரை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவருக்குப் பரிசு வழங்கி தென்மண்டல தபால் துறை இயக்குநர் நிர்மலாதேவி பேசியது:
கடிதம் எழுதும் பழக்கம். தற்போது குறைந்து வருகிறது. கடிதம் எழுதுவதன் மூலம் கையெழுத்து, மொழித் திறன் வளர்ச்சி உருவாகும். கடிதம் எழுதும் கலையை அழித்து விடக்கூடாது. சிற்பங்கள், கோயில்கள் போல அஞ்சல் தலைகளும் பாரம்பரியங்கள் தான். அஞ்சல் தலைகளை பார்க்கும்போது முன்னர் நாடு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.
கண்காட்சியில் காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. தபால் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், தலைமை தபால் ஊழியர் பிரகாஷ், டி.வி.எஸ். லட்சுமி பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.