

நரபலி புகார் தொடர்பாக இன்று விசார ணைக்கு ஆஜராகும்படி பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேருக்கு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பினர்.
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார். கீழவளவை சேர்ந்தவரும், பிஆர்பி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றியவருமான சேவற்கொடியோன் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் ஊழியர்கள் மீது நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கீழவளவு போலீஸார் பிஆர்பி நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது நிறுவனப் பணியாளர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவம் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 174 (இறப்பு), 201-ன் கீழ் (சந்தேகத்துக்குரிய மரணம்) வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் மேலூர் அருகே இ.மலம்பட்டி மயானத்தில் போலீஸார் மருத்துவ குழுவினர் முன்னிலையில் தோண்டியதில் 4 பேரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே பி.ஆர்.பழனிச்சாமி, அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவம் ஆகியோருக்கு கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் நேற்று சம்மன் அனுப்பினார். அதில், நரபலி புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று (செப். 15) கீழவளவு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிஆர்பி நிறுவன வழக்கறிஞர் மனோகரன் கூறியது: 4 பேரும் விசாரணைக்கு ஆஜராவர். குற்றவியல் விசாரணை முறைச்சட்டப்பிரிவு 41(ஏ)-ன் கீழ் இந்த வழக்கில் யாரையும் கைது செய்ய முடியாது. சட்டப்பிரிவு 201-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது. கொலை நடந்ததா என உறுதியாகாத நிலையில், சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விசாரணை நடத்துவர் என்றார்.