Published : 01 Sep 2020 10:20 AM
Last Updated : 01 Sep 2020 10:20 AM

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப்.1) வெளியிட்ட அறிக்கை:

"விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நூற்றாண்டு கால கனவுத் திட்டமான நந்தன் கால்வாய் திட்டம் இன்னும் முழுமையடையாதது வருத்தமளிக்கிறது. இரு மாவட்டங்களின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கக்கூடிய நந்தன் கால்வாய்த் திட்டத்தையும், தென்பெண்ணை - துரிஞ்சலாறு இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதில் அரசு இனியும் தாமதம் காட்டக் கூடாது.

திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகளை நிரப்பி, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தந்தது தான் நந்தன் காலவாய் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் ஆதாரமாகத் திகழ்ந்த கீரனூர் அணை 200 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து விட்ட நிலையில், காலப்போக்கில் கால்வாய்களும் சீரழிந்து விட்டன. அணையையும், கால்வாய்களையும் சீரமைத்து நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று 1930-களின் இறுதியில் ராஜாஜி ஆட்சிக் காலத்திலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டாலும் கூட, கடந்த 80 ஆண்டுகளாக அவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படவில்லை.

மண்ணின் மைந்தரும், எனது மதிப்பிற்குரியவருமான ஏ.ஜி என்றழைக்கப்படும் ஏ.கோவிந்தசாமி தமிழக அமைச்சராக இருந்த போது, நந்தன் கால்வாய்த் திட்டத்தின் தேவையை உணர்ந்து அதற்கான பணிகளை மேற்கொண்டார்.

அண்ணா காலத்தில் தொடங்கி கருணாநிதி காலத்திலும் தொடர்ந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே, நல்வாய்ப்புக்கேடாக ஏ.ஜி. காலமானதால், கால்வாய் பணிகள் முழுமை அடையவில்லை.

அதன்பின்னர் எம்.ஜி.ஆர் காலத்தில் ஓரளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முழுமை பெறவில்லை. காலப்போக்கில் கால்வாய்கள் சீரழிந்து, இருந்த தடம் தெரியாமல் மறைந்து விட்டன.

நந்தன் கால்வாயை சீரமைப்பதற்கான கோரிக்கைகள் கடந்த 35 ஆண்டுகளாக மீண்டும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது, அதற்காக முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் நந்தன் கால்வாய் சீரமைப்பு மற்றும் தென் பெண்ணையாறு - துரிஞ்சலாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட 20 நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

அதையேற்று நந்தன் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதை நிறைவேற்றும் தருணம் கனிந்து விட்டது.

கீரனூர் அணையிலிருந்து 37 கி.மீ. நீள கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று 35 ஏரிகளை நிரப்பிய பிறகு பனமலை ஏரியை நிரப்ப வேண்டும். பனமலை ஏரியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட சிறிய ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். பனமலை ஏரி 700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

நந்தன் கால்வாய்த் திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் திருவண்ணாமலை - விழுப்புரம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அவ்வாறு பாசன வசதி பெற்றால் அப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். அது இரு மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும்.

அதேநேரத்தில் கீரனூர் அணை மற்றும் கால்வாய்களை சீரமைப்பதன் மூலமாக மட்டுமே இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விட முடியாது. கீரனூர் அணை அமைந்துள்ள துரிஞ்சலாற்றுக்கு நிலையான நீராதாரம் கிடையாது. மழைக்காலத்தில் மட்டுமே அந்த அணையிலிருந்து தண்ணீர் பெற முடியும்.

மாறாக, தென்பெண்ணையாற்றையும் துரிஞ்சலாற்றையும் இணைத்தால் பெரும்பாலான மாதங்களில் நந்தன் கால்வாயில் தண்ணீர் பெற முடியும். எனவே, நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டத்துடன், தென் பெண்ணையாறு - துரிஞ்சலாறு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

விரைவில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x