

கரோனா ஊரடங்கால் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர் களுக்குச் சென்று விட்டதால், போடி - மதுரை அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
போடி - மதுரை இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனை 2011-ம் ஆண்டில் அகல பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இதற்காக, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முதற்கட்டமாக ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டது.
90 கி.மீ. தூரமுள்ள இந்த வழித் தடத்தில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் நடந்துவந்தன. ரயில் நிலையங்களில் கட்டி டம் கட்டுதல், தரைப்பாலம் அமைத்தல், தண்டவாளங்களைப் பொருத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முதற்கட்டமாக, ஆங்கிலேயர் காலத்தில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான தரைப் பாலங்கள் இடிக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை பணிகள் முடிந்தன. இதற்கான சோதனை ஓட்டமும் நடந்தது. ஆண்டிபட்டி அருகே கணவாய்ப் பகுதியைப் பொறுத்தளவில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் மலை நெருக்கமாக அமைந்துள்ளது. இவற்றைக் குடைந்து பாதை அகலப்படுத்தப்பட்டது. இதனால் தேனி பகுதியில் அகல ரயில் பாதைப் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கம் வரை பணிகள் மும் முரமாக நடந்தன. ஆனால், கரோனா ஊரடங்கால் இப்பணி பல மாதங்களாகத் தடைப்பட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலரும் தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டதால் களப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி, தேனி அருகே அரண்மனைப்புதூர் விலக்கு வரை நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து உயரமாக மண் மேவுதல், மழைநீர் வழிந்தோடும் பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி கணவாய் மலைப் பாதையை அகலப்படுத்துவது சவாலாக இருந்தது. வெடிவைத்து பாறையை தகர்த்து சுமார் 625 மீட்டர் தூரம் சீரமைக்கப்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வு உள்ளிட்டவற்றால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் இப்பணி துரிதமடையும். 6 மாதங்களில் பணிகள் நிறை வடைந்து விடும் என்றனர்.