விழுப்புரம் மின் மயானம் முக்தியில் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க கட்டணம் வசூல்

விழுப்புரத்தில் நகராட்சி சார்பில் இயங்கும் முக்தி மின் மயானம்.
விழுப்புரத்தில் நகராட்சி சார்பில் இயங்கும் முக்தி மின் மயானம்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏப்ரல் 4-ம் தேதி ஒருவர் உயிரிழந்தார். இஸ்லாமிய முறைப்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின் இறந்தவர்களின் உடல்கள் விழுப்புரம் நகராட்சிக்கு சொந்தமான முக்தியில் தகனம் செய்யப்பட்டது. நேற்று வரை மாவட்டத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பத்தில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முக்தி நிர்வாகம் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் இறந்தவர்களின் உறவினர்களிடம் வழக்கமாக வசூலிக்கப்படும் ரூ 2,500 வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இது குறித்து முக்தி நிர்வாகி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “தொடக்கத்தில கரோனா தொற்றால் இறந்தவர்களை தகனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஏதோ ஒன்றிரண்டு உடல்கள் மட்டுமே தகனம் செய்ய வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் கரோனாவில் இறந்த விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அதிக அளவில் வர தொடங்கின. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்த போது இதுவரை இறந்தவர்களை தகனம் செய்த செலவை வழங்கி விடுகிறோம். இனிமேல் கரோனா தொற்றால் இறப்பவர்களின் உறவினர்களிடம், வழக்கமாக வசூலிப்பது போல வசூலித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டனர். வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் கொண்டே இந்த மின் மயானத்தில் எரிக்கப்படுகிறது. இந்த செலவுகளை எங்களால் ஈடுகட்ட முடியாததால் வேறுவழியின்றி வசூலிக்க வேண்டியகட்டாயத்திற்கு தள்ளப்பட்டு ள்ளோம்“ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in