Published : 01 Sep 2020 07:51 AM
Last Updated : 01 Sep 2020 07:51 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நம்பிக்கை

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜக இளைஞரணி மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் அளித்த பேட்டி:

வரக்கூடிய தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார் நிலையில் உள்ளது. பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுள்ள சூழலில் 60 தொகுதிகளில் எங்களால் தனித்து நிற்கக்கூடிய வாய்ப்புகளும், வெற்றி பெறும் வாய்ப்புகளும் உள்ளன. இம்முறை பாஜக சார்பில் அதிகளவிலான எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள்.

அதிமுக உடன் சிறப்பான உறவு

அதிமுகவுடனான பாஜகவின் உறவு சிறப்பாக உள்ளது. தேவையில்லாமல் சிலர் சர்ச்சைகளை உருவாக்குகின்றனர். கருத்து மோதல் ஏதும் ஏற்படவில்லை. கூட்டணி குறித்து கட்சித் தலைமை என்ன சொல்கின்றது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் 3 மொழிகள் கற்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளில் இந்த நடைமுறை உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள்தான் 3 மொழிகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். இவற்றைப் படிக்க மாணவர்கள் தயாராக உள்ளனர். அதற்கு பெற்றோரும் ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் இதில் சிலர் அரசியல் செய்கின்றனர்.

அதேபோல திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் 3, 4 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவர்கள் ஏன் போலி முகத்திரை அணிந்துள்ளனர்? இதை வெளிப்படுத்தும் வகையில் திமுகவினர் நடத்தும் பள்ளிகள் முன் பாஜக இளைஞரணி சார்பில் விரைவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

ஸ்டாலின் விளக்க வேண்டும்

கந்த சஷ்டி கவசத்தை யூ டியூப்பில் தவறாக சித்தரித்த சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதா, இல்லையா? என்பதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். கட்சியில் புதிதாகச் சேர்ந்த அண்ணாமலைக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி கொடுத்ததால் கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை பாஜக வரவேற்கிறது. பாஜகவில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரலாம். குற்றச் செயல்கள் உள்ளவர்களுக்கு பொறுப்பு கொடுப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x