

வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதியில் மாற்றுத் திறனாளி, நரிக்குறவர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு நிவாரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொண்டர்களைப் போல சில ரவுடிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, ஓட்டேரி போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரை கண்டவுடன் ரவுடி சூரியா மற்றும் சிலர் அங்கிருந்த பாஜக பிரமுகரின் காரில் தப்பிச் சென்றதால் போலீஸார் அந்த ரவுடிகளை பிடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
மேலும் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதனால் போலீஸார் அவர்களின் வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அவற்றில் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்ததால், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள் ருக்மனந்தன்(20), யுகா ஆதித்யன் (22), சரத் (எ) சரத்குமார் (29), ஜோசப் பெஞ்சமின் (20), அன்பரசு (28), பிரபாகரன் (35) எனத் தெரியவந்தது.
இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலையத்துக்குச் சென்று, போலீஸார் விசாரிக்க அழைத்துவந்த 6 பேரையும் விடுவிக்கக் கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.